பக்கங்கள்

திங்கள், 16 ஜூலை, 2012

மனசு பெருத்த மாமனிதர் காமராஜர் - இரா. எட்வின்



இந்த பதிவு வாலறிவன் அவர்களால் ஞாயிறு, 15 ஜூலை, 2012 | 7:39 PM மணிக்கு பதியப்பட்டது.


மனசு பெருத்த மாமனிதர்

எப்போதோ ஒரு முறை தமிழருவி மணியன் சொன்னார்,

“தலைவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் பெருந்தலைவர் ஒருவரை எப்போதாவதுதான் ஒரு சமூகம் அபூர்வமாக ஈன்றெடுக்கும்”

அப்படி ஒரு ஜூலை15 அன்று தமிழ் மண்ணிற்கு வரமாய் வந்து சேர்ந்தீர்கள் பெருந்தலைவர் அவர்களே,

பிறக்கும் போதே ஒரு ஒளி வட்டத்தோடோ அல்லது பாரம்பரியப் பின்னணியோடோ நீங்கள் அவதாரமெல்லாம் எடுத்திருக்கைல்லை. ஒருக்கால் அப்படியேதேனும் நிகழ்ந்திருப்பின் இதை எழுதவேண்டிய அவசியமும் எனக்கு இருந்திருக்கப் போவதில்லை.

உங்கள் வெற்றியின் அளவைக் காட்டிலும் அதற்கான உங்களின் வியர்வைச் செலவு அதிகம் அய்யா. ஆனால் அதற்காகக் கூட இதை எழுதவில்லை. பஞ்சைப் பராறிகளான எங்களின் கல்விக்காகவே நீங்கள் பெருமளவு உழைத்தீர்கள்.

காலில் செருப்புமில்லாமல்தான் கரடு முரடான சாலைகளில் நடந்து கொண்டிருந்தோம்.எத்தனைத் தேர்தல்கள், எத்தனை வாக்குறுதிகள்,எத்தனைத் தலைவர்கள், எத்தனை மன்றாடல்கள்?

“கண்ணில்லாதவன்
கை ஏந்தும் போது
நாமெல்லாம்
குருடர்கள்”

என்று தங்கம் மூர்த்தி சரியாய்த்தான் எழுதினார். எங்கள் மன்றாடல்களை கண்டு கை ஏந்தும் கண்ணில்லாதவர்கள் முன் குருடனாய்ப் போகும் சராசரிக்கும் கீழான தலைவர்களே அதிகம் இருந்தார்கள். கற்களும் முட்களும் சேதப் படுத்திய எங்கள் பாதங்களைப் பற்றி கவலைப் பட்ட முதல் தலவனாய் வந்தீர்கள்.

நல்ல சாலைகள் வந்தன.

கிராமங்கள் இருண்டு கிடந்ததைப் பர்த்து கவலை கொண்டீர்கள்.

எங்கள் ஊருக்கும் மின்சாரம் வந்தது. எங்கள் தெருவிலும் தெரு விளக்குகள் ஒளிர்ந்தன.

நீங்கள் கேட்கக் கூடும் பெருந்தலைவர் அவர்களே,

“என் வேலையைத் தானே செய்தேன் ? “ என்று

அது என்னவோ உண்மைதான் தலைவரே. ஆனால் அதற்கு முன்னாலெந்தத் தலைவனுக்கும் இல்லாத கவலை இது. இன்னும் சொல்லப் போனால் சலவை தொழிலாளிகள் மாநாடு ஒன்றில் தங்களது குழந்தைகளுக்கு இலவச ஆரம்பக் கல்வி வேண்டும் என்று கோரிக்கை வைத்த சலவைத் தொழிலாளர்களிடம்,

“துறை சார்ந்த கோரிக்கை வையுங்கள்” என்று சொன்ன மூளை பெருத்த கனவான்கள் வாழ்ந்த தமிழ் மண்ணில் நாங்களும் கல்வி பெற வேண்டும் என்று கவலைப் பட்டவர் நீங்கள். கவலைப் பட்டதோடு நில்லாமல் காரியமாற்றிய மனசு பெருத்த மனிதர் நீங்கள்.

இதுதான் என்னை இதை எழுத என்னை உந்தித் தள்ளியது.

தோழர் ஜீவா, தோழர் பி. ராமமூர்த்தி, தந்தை பெரியார், தோழர் சிங்கார வேலனார், என்பதாய் நீளும் தமிழகம் கண்டபெருந்தலைவர்களுள் உங்களை மட்டுமே மக்கள் பெருந்தலைவராய்க் கொண்டாடினார்கள். இவர்களில் யாரும் உங்களுக்கு இளைத்தவர்கள் இல்லைதான்.

எங்களுக்காக உழைத்தார்கள், எங்களுக்காகப் போராடினார்கள், எங்களுக்காக தங்கள் வாழ்க்கையின் சகல சொகுசுகளையும் இழந்து தியாகித்தார்கள்.

ஆனாலும் செய்யக்கூடிய இடம் இவர்களில் உங்களுக்கு மட்டுமே வாய்த்தது. அர்ப்பணிப்போடு செய்தீர்கள். அதனால்தானிந்த அங்கீகாரம் உங்களுக்கு.

நானே கூட மேற்சொன்ன யாருக்கும் எதுவும் எழுதியதில்லை. செய்தவர்களை கொண்டாடுமளவிற்கு செய்யக் காரணமாயிருந்தவர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை.

உங்களையும் கொண்டாடவேண்டிய அளவிற்கு கொண்டாடினோம் என்று சொல்வதற்கில்லை. எங்களால் முடிந்த அளவிற்கு காயப்படுத்தவும்தான் செய்தோம்.

கூறியது கூறல் குற்றமாகக்கூட இருக்கலாம். இதில் கொஞ்சம் மிகைக்கூட இருக்கலாம். நிறைய மேடைகளில் கேட்டவைதான், ஏன் நானே பல மேடைகளில் பேசியவையும் எழுதியவையும்தான்.இந்த நாளில் அவற்றைப் பற்றி அசைபோடுவதுதான் சரி என்று படுகிறது.

நீங்கள் ஒருமுறை மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்தீர்கள் தலைவரே. ரயில்வே கேட் போடப் படுகிறது. மகிழுந்தை விட்டு இறங்கி நிற்கிறீர்கள். ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருப்பது உங்கள் கண்களில் படுகிறது. அவனை அழைக்கிறீர்கள்.

வருகிறான்.

“என்ன பெரிசு?”

கேட்க முடியுமா பெருந்தலைவா? கேட்டால் வம்சமே அழிந்து போகாதா? ஆனால் நீங்களோ புன்னகைத்தீர்கள். அவனது தலையை வாஞ்சையோடு வருடிக் கொடுத்தீர்கள். அவனது தலை காய்ந்து கிடந்த்து உங்கள் கண்களை ஈரப் படுத்தியது. என்ன செய்வது தலைவரே, யார் எழுதியது என்று தெரியவில்லை. ஆனால் அடிக்கடி கிருஷ்ணகுமார் பேசக் கேட்டிருக்கிறேன்

“எங்கள்
தலையில்
எண்ணெய் இல்லை
ஏனென்றால்
ஆள்பவர் தலையில்
எதுவுமேயில்லை”

தலையிலேயே ஏதும் இல்லாதவர்கள் மத்தியில் மனதும் பெருத்த மாமனிதர் நீங்கள். சிறுவனின் தலையை வருடிக் கொண்டே கேட்கிறீர்கள்,

“ஏம்பா மாடு மேய்க்கிற?”

“ வேற என்ன செய்ய?”

“ பள்ளிக்கூடம் போகலாம்ல””

“போலாம் . பீஸ யாரு கட்டுவா?”

“ பீஸ கட்டிட்டா போவியா?”

“கட்டிப் பாரு”

ஓடுகிறான். கண்களைத் துடைக்கிறீர்கள்.

ஒரு நாளெல்லோருக்கும் இலவசக் கல்வி கொடுக்க சட்டம் கொண்டுவர விழைந்தீர்கள். ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி அதில் உள்ள சட்ட சிக்கலை சொன்னாராம் உங்களிடம். அவர் சொன்னாராம்,

“அய்யா அதற்கு GO வில் இடமில்லைங்க”

“GO ன்னா என்ன?”

புத்தகங்களை மட்டுமே வாசித்திருந்த அந்த அதிகாரி கொஞ்சம் மக்களின் மனசையும் உங்களது அர்ப்பணிப்பையும் வாசித்திருந்தால் சுதாரித்திருக்கக் கூடும். உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று நினைத்து அதை தமிழ்ப்படுத்துகிறார்,

“அரசாணைங்க அய்யா”

விடாது விரட்டுகிறீர்கள்,

“அரசானைனா என்ன?”

மிரள்கிறார். அவரைப் பார்த்து நீங்கள் சொன்னதாக சொல்வார்கள்,

“உன்ன மாதிரி படிச்ச அதிகாரி நின்று, என்னை மாதிரி படிக்காதவன் சொல்றத எழுதி படிச்ச நீ படிக்காத என்னிடம் கையெழுத்து வாங்கினால் அதுதான்பா அரசாணை, GO எல்லாம்.”

எழுதுகிறார். போய் தட்டச்சு செய்யச் சொல்லி வாங்கி வந்து நீட்டுகிறார். கையொப்பமிடுகிறீர்கள்.

பள்ளிக்குப் போகிறோம்.

இன்னொரு முறை ஒரு பள்ளி விழாவிற்கு செல்கிறீர்கள். வரவேற்புரையாற்ற வந்த ராஜேஸ்வரி என்ற மாணவி பணக்காரப் பிள்ளைகள் விதவிதமாக உடை உடுத்தி வருவதாகவும் அது தங்களது மனதை சஞ்சலப் படுத்தி கற்றலை ஊறு செய்வதாகவும். எனவே, எல்லோரும் ஒரே மாதிரி உடையோடு பள்ளிக்கு வர ஏற்பாடு செய்தால் நலமென்றும் சொல்லவே சரி என்கிறீர்கள்.

சீருடை வருகிறது.

அன்று நீங்கள் போட்ட கையெழுத்தின் விளைவு,

நான் இன்று ஒரு முது கலை ஆசிரியன், என் மனைவி ஒரு இடை நிலை ஆசிரியை, என் தம்பி மின்வாரியத்தில், எனது ஒரு தங்கை முது கலை படித்திருக்கிறாள், என் மூத்த மகன் பொறியியல் இரண்டாமாண்டில்...

ஒரு கையெழுத்தில் எங்கள் வாழ்க்கையை வெளிச்சப் படுத்திய உங்களை கை எடுத்து கும்பிடாவிட்டால் நான் மனிதனல்ல.

நான் மனிதன் பெருந்தலைவரே.

இரண்டு சொட்டு கண்ணீரும் வணக்கமும் தலைவரே.               

எழுதியவர் : இரா. எட்வின் 


newsalai. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக