“விசுவரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதா இல்லையா?” என்ற கோணத்தில் மட்டுமே இப்பிரச்சினை குறித்த விவாதம் நடந்திருக்கிறது. அந்தப் படம் யாருக்கு ஆதரவானது என்பது குறித்த விவாதம் நடைபெறவில்லை. “இது  அமெரிக்க ஆதரவுத் திரைப்படம்; ஆஸ்கர் விருதுக்காக அமெரிக்க கைக்கூலித்தனம் செய்திருக்கிறார் கமலஹாசன்” என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இந்தப் பதில் சராசரி முஸ்லிம் வாசகர்களை மேலோட்டமாக திருப்திப் படுத்தலாம்.
சவூதி இளவரசரும், பின்லாடனும், முல்லா ஒமரும், பாக் அதிபர்களும், கமலஹாசனுக்கு வெகு காலம் முன்னதாகவே அமெரிக்காவுக்கு கைக்கூலி வேலை செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். அவர்கள் எந்த ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைகாண இக்கட்டுரை உதவும்.