பக்கங்கள்

திங்கள், 18 பிப்ரவரி, 2013

-----(சமூக துரோகிகளை,அரசியல் வாதிகளின் உண்மை தோற்றத்தை அம்பலப்படுத்தும் தொடர் -ALL 11 chapters )---

அகதியான போது ..................

--------------------------------------------------------------------------------------ரஹீம்ராஜி

------(சமூக துரோகிகளை,அரசியல் வாதிகளின் உண்மை தோற்றத்தை அம்பலப்படுத்தும் தொடர் -ALL 11  chapters  )---

 

பாகம் 1

 

கடுமையான ஷெல் சத்தத்துக்கும் துப்பாக்கி வேட்டுகளின் இரைச்சலுக்கும் மத்தியில் இன்னொரு யுத்த களத்தை பார்க்கக்கூடாது என்று பல குடும்பங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு தெற்கு நோக்கி கிடைத்த வழிகளில் பயணம் செய்து கொண்டிருந்த காலம் அது.
புலிகளின் துப்பாக்கிகள் ஒரு புறம் முழங்க ..இராணுவத்தின் துப்பாக்கிகளும் ,ஹெலிகொப்டர்களும் ,விமானங்களும் காதுகளை செவிடாக்கி மரணத்தை மிக அருகில் உணர்த்தும் பொழுதுகளாக இருந்தன அவை..
யுத்தத்தின் அந்த இரைச்சல் உயரும் போது எமது வாய்களில் ஒலிக்கும் யாஷீன் ஷூராவின் சத்தமும் அழுகை கலந்து உயர்ந்து ஒலிக்கும் ..

மின்சாரம் இல்லாத காரிருட்டில் சந்திரனின் ஒளியிலும் ,ஷெல் வீச்சுகளின் வெளிச்சத்திலும் வாழ்ந்த அந்த இரவுகள் யுத்தத்தின் சத்தங்களால் நிறைக்கப்பட்டிருந்த பயங்கரமான பொழுதுகள்... ஒவ்வொரு இரவுகளும் விடியும் போதுதான் அண்டை வீட்டார் ,உறவினர்கள்,ஏன் நம் உடன் பிறப்புகள் உயிரோடு உள்ளனவா என்று தெரிய வந்த சொற்களால் வருணிக்க முடியாத காலம் அது
இதுதான் தருணம் என்று தவித்த முயல் அடிக்கும் சில பணக்கார முதலைகள் அங்கும் இதை வியாபாரமாக்கியது கவலைக்குரிய விடயம் .லொறியில் ஆடு மாடுகளை அடைவது போன்ற 'சொகுசான' அந்த காட்டின் ஊடான பயணத்துக்கு தலைக்கு 500 ரூபா .இது 1990 இல் ...
இதற்கும் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய இக்கட்டான நிலை.போகும் வழியில் புலிகள் நகைகளை கழற்றி எடுப்பதாக பறை சாற்றிக்கொண்டிருந்தன 'தூர நோக்கோடு சிந்திக்கத்தெரிந்த' சில இளசுகள். 'அந்த தூர நோக்கம்' வேறு எதுவும் பயனுள்ளதாக இருக்கவில்லை. நகைகளை வீட்டில் வைத்துப்போன குடும்பங்களின் வீடுகளை சூறையாடுவதற்கான முன் ஏற்பாடுகள்தான் அவை.இங்கு கவலைக்குரிய விடயம் எதுவென்றால் இரண்டு மணிநேர வெளியேற்றம் நடைபெற முன் இடம்பெற்ற நம்மவர்களின் அமைதியான அத்து மீறல்கள்தான் .அதை நம்பி எனது குடும்பமும் எமது நகை நட்டுக்களை வீட்டின் பின் புறம் உள்ள கொல்லையில் குழி தோன்றி புதைத்து வைத்தது .
இங்கு குறிப்பிட்டாக வேண்டிய ஒரு அமைப்பு ,இளைஞர் அமைப்பு என்று தம்மைத்தாமே அழைத்துக்கொண்ட விசிலடிச்சான் குஞ்சுகள் அமைப்பு.இது செய்த அட்டூழியங்கள் ,அநியாயங்கள் ஏற்கனவே யாழ்ப்பாண முஸ்லீம்களை இரண்டாக பிளவு படுத்தி இருந்ததது .ஏற்கனவே தப்லீக் ஜமாஅத் இயக்கம் மாத்திரம் அங்கு இருந்த நிலையில் பல கல்வி மான்களின் ஓன்று சேரலால் ஜமாத்தே இஸ்லாமி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு பல பிரச்சனைகளை இந்த இளைஞர் அமைப்பு தோற்றுவித்து வந்தது.பல கஷ்டங்களுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்ட பல மாடிகள் கொண்ட முதலாவது யாழ்ப்பாண மதறசா கல்விககூடம் குண்டு வீசப்பட்டது ,பல ஜமாத்தே இஸ்லாமி அங்கத்தவர்களின் வீடுகள் உடைக்கப்பட்டமை ,காதி அபூபக்கர் வீதியில் உள்ள ஜாமதே இஸ்லாமி பயிற்சி மன்றத்தின் உள்ள குர் ஆன்கள்,பெறுமதி வாய்ந்த புத்தகங்கள்,ஹதீஸு கிரந்தங்கள் வெள்ளிக்கிழமை இரவன்று தீக்கிரையாக்கப்பட்டமை ,இன்னும் கிரினைட் எறியப்பட்டு யாழ் முஸ்லீம் சிறுவான் ஒருவனை கொன்றமை ,சமூகத்தை பிளவு படுத்தியமை இவை அனைத்தும் இந்த இளைஞர் அமைப்பின் சாதனைகளாக இருந்தன ..
ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதற்கு வாழ்த்து கொண்டிருக்கும் இந்த யாழ்ப்பாண முஸ்லீம்களின் சரித்திரம் எடுத்துக்காட்டு என்பதை பின்னர் காண்பீர்கள்..
1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்க நடந்த அகோர போரின் போது நானும் எனது குடும்பமும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே எங்கும் போக வில்லை .அப்போது சில முஸ்லீம் இளைஞர்கள் வீடுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை எடுத்து சொந்தம் கொண்டாடிய காட்சிகளை சிறுவனாக இருந்த நான் கண்முன்னே கண்டேன் .
ஆனால் 1990 இன் யுத்தம் மிகவும் கடுமையானதாக இருந்தது.1987 களில் ஏற்பட்ட யுத்த கால கஷ்டத்தை மீண்டும் அனுபவிக்க விரும்பாத பல குடும்பங்கள் இரண்டு மணி நேர வெளியேற்றத்துக்கு முன்னரே அங்கிருந்து வெளியேற த்தொடங்கி இருந்தன .
அது 1990 ஜூலை மாதம் ....
இன்னமும் ஞாபகம் இருக்கிறது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக