பக்கங்கள்

புதன், 20 பிப்ரவரி, 2013

புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்!



புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்!

‘வருஷத்தின் 365 நாளுக்கும் ஏதோ ஒரு தினத்தைக் கொண்டாடிக்கிட்டு கடுப்பேத்தறாங்க மை லார்ட்’ என்பதுதான் இப்பப் பல பேரின் எண்ணமா இருக்கு. இயற்கையோட ஒன்றின வாழ்வும், இதயத்தில் சுரக்கிற நேசமுமா இருந்தப்ப எந்த நாளுக்கும் அவசியம் இருந்திருக்கல. ஆனா இப்ப?

‘உறவைக் கொண்டாடும் நாட்களை மேலை நாட்டுலருந்து இறக்குமதி செஞ்சு காசு பாக்குறாங்க வியாபாரிங்க’ என சிலபேர் அலுத்துக்கிற போது சரின்னே தோணுனாலும் இன்னொரு பக்கம் ‘இப்ப விடவோ அப்ப விடவோ’ன்னு நைஞ்சு கிடக்கிற உறவு இழைகளைப் பார்க்கையிலே அவற்றுக்கான தேவையும் வந்திடுச்சோன்னும் எண்ணம் ஏற்படுது.




உலகம் போற அபாயமான பாதையை உணர்ந்து, அடுத்த தலைமுறைக்கு இருக்கிற வளத்தையாவது விட்டு வைக்கணுமேங்கிற அக்கறையிலே அங்க இங்கக் கூட்டு முயற்சியா செயல்படுற இயற்கை ஆர்வலர்களையும் வேலையத்தவங்கன்னு நினைக்கிறாங்க சிலரு. கொஞ்சம் பேராவது உரக்க எடுத்துச் சொல்லிக் களமிறங்கி செயல்படுறதாலதான், பூமியக் காக்க நம்மால என்ன முடியும்ங்கிற சிந்தனை தனி மனுசங்களுக்கு ஏற்படுது. நாட்டுல எத்தனையோ பிரச்சனைங்க இருக்கையில எதுக்கு புவி தினம், சுற்றுப்புறச் சூழல் தினம்னா, அங்க சுத்தி இங்க சுத்தி பசி பஞ்சத்துக்கான காரணங்களுல முக்கியமானதா இருக்கிறதே இயற்கையை மதிக்காத நம்ம போக்குதான்ங்கிற  புரிதல் வரும்.

இதோ மூணு நாள் முன்னே கடந்து போச்சு புவிதினம். நாப்பதிரெண்டு வருஷங்களுக்கு முன்ன திரு. கேலார்டு நெல்சன் இந்த தினத்தை ஏற்படுத்தினாருங்கிற தகவலோடு அவர் சொன்ன முக்கியமான ஒரு சங்கதியையும் பகிர்ந்திருந்தார் இங்கே ‘மண், மரம், மழை, மனிதன்’ திரு வின்சென்ட் அவர்கள்:

நாட்டின் செல்வமே காற்று, தண்ணீர், மண், காடுகள், தாதுஉப்புக்கள், ஆறுகள், ஏரிகள், மாகடல்கள், இயற்கை அழகு, வனஉயிர்களின் உறைவிடம், உயிரனவளம் ஆகியவைதான். இவைகள்தான் முழுமையான பொருளாதாரம். இவற்றிலிருந்துதான் எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் வேலைவாய்ப்பும் கிடைக்கின்றன. இவைதான் உலகத்தின் நிலையான சொத்து.

இதுல எத்தனை விஷயங்களைப் பாழ்படுத்திட்டோம்ங்கிறத நினைக்கையில பகீருன்னுதான் இருக்கு.

# பரந்து விரிந்து..
இப்படியாக நிழல் பரப்பிக்கிட்டிருந்த நாலாயிரத்தும் மேலான மரங்களை பெங்களூர் மெட்ரோவுக்காகவும் சாலைவிரிவாக்கத்துக்காகவும் இழந்தாச்சு. 37.1 டிகிரி செல்சியஸோட, இந்த வருடத்தின் அதிக வெப்பமான நாளா நேற்றைய தினம். இன்னும் கோடை முடியல. அதுமட்டுமா? தமிழகம் போல கர்நாடகாவின் பலபாகங்கள்ல திடுதிப்புன்னு மின்வெட்டு. உச்சக் கட்டமா,கிருஷ்ணா நதியில் நீரில்லாமல் ரெய்ச்சூர் பவர் ப்ளாண்டின் எட்டுல நாலு யூனிட்கள் ட்ரிப்பாகி விட மின்வெட்டு நேரத்தையும் அதிகரிச்சிருக்காங்க. பாதிப்பு பெங்களூரை முழுசா எட்டலைன்னாலும் வெட்டு விழும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நூற்றாண்டுகளா வேர் விட்டுத் தளைச்சு நின்ன பல விருட்சங்களையும்....


அடர்ந்த காடுகளயும்.....வெட்டி சாச்சுட்டு மழையில்லன்னு புலம்பிட்டிருக்கோம். ஆரம்பப் பத்திகளில் நான் வெளிப்படுத்தியிருக்கிற கருத்துகளைப் பிரதிபலிச்ச நண்பர் சதங்காவின் புவிநாள் பதிவும் என்னைக் கவர்ந்தது. அதுல இரண்டு பத்திரிகைக் கட்டுரைகளைப் பகிர்ந்திருந்திருந்தார். இய‌ற்கை வேளான் விஞ்ஞானி ந‌ம்மாழ்வார் சொன்னதாக சதங்கா பகிர்ந்ததிலிருந்து:

இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.

மரங்க செய்யற பேருதவி நாம சின்ன வயசுல படிச்சதுதான். இப்ப திரும்ப நினைவு படுத்திக்கதான் வேண்டியிருக்கு. சில வருடம் முன் நண்பர் உழவன் கார் பார்க் செய்ய தன் வீட்டிலிருந்த மரங்களை வெட்டலாமான்னு முதல்ல யோசிச்சு அப்புறம் வேண்டாம்னு முடிவெடுத்ததைப் பகிர்ந்திருந்தார். அவரைப் பாராட்டிய கையோடு நான் எழுதிய கதைதான் முதன் முதலில் தினமணி கதிரில் எனக்கொரு வாசலைத் திறந்துச்சு: வயலோடு உறவாடி. உங்களுக்கு படிக்க நேரமில்லாட்டாலும் நான் அதன் மூலம் சொல்ல விரும்புனது: வயலு வரப்பு தோட்டந்தொரவு வச்சிருந்தா முடிஞ்ச வரை அதை அப்படியே பேணமுடியுதா பாருங்க. வளைச்சுப் போடக் கண்கொத்திப் பாம்பா இருக்குறாங்க ரியல் எஸ்டேட்காரங்க. வீட்டச் சுத்தி மண்ணா இருக்கிற பூமியை பராமரிக்க கஷ்டமுன்னு சிமெண்ட்டப் போட்டு மூடாதீங்க. வீட்டில இருக்கிற மரங்கள விட்டுவையுங்க. அடுக்கு மாடிக்காரங்க தொட்டியிலயாவது செடி வளருங்க. உங்க பக்கம் இருக்கிற பூங்கா அல்லது சாலையில மரக்கன்றுகளை நட்டு குழந்தைகளைத் தண்ணி ஊத்திப் பரமாரிக்க ஊக்கப் படுத்துங்க ‘சிறுமுயற்சி’ முத்துலெட்சுமியைப் போல: One Boy One Tree

பாருங்க உழவன் ஒரு தனிமனிதனா யோசிச்சு ஒரு மரத்தை வெட்டாம விட்டதை ‘புதிய தலைமுறை’ பத்திரிகைப் பாராட்டி பரிசு வழங்கியிருந்துச்சு, அது எதுக்கு? எல்லாராலும் ஏதோ ஒரு விதத்துல இயற்கையைக் காக்க உதவ முடியும்னு உணர்த்துறதுக்காகதான்:

சென்னையிலிருந்த வரை (இப்ப இருப்பது கோவை) அவரோட குட்டி மகளுக்கு எத்தனை சுத்தமான காத்தை அந்த மரங்கள் கொடுத்திருக்கும்? ‘என் வீட்டுத் தோட்டத்துக்கு வரும் வண்ணத்துப்பூச்சிகளுக்குக் குட்டிக் கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துச் செல்கிறாள் அகமதி’ன்னு அடுத்த சில மாசத்துல அவர் பகிர்ந்த ஒரு ட்விட்டர், புன்னகையை வரவச்சதோட சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளின் வரவு அந்த மரங்களோட ஆசிர்வாதமுன்னும் நினைக்க வச்சது:)!

ஈரோடு கதிர் மூலமாக நமக்கெல்லாம் தெரியவந்த கோடியில் இருவரைமறக்க முடியுமா? தன்னலமற்று இந்தப் புவிக்காக ஆயிரக்கணக்கான மரங்களை நட்டவங்க.

‘நட்டு வளக்காட்டாலும் வெட்டிச் சாய்க்காதீங்க’ன்னு விசும்புகின்றனவோ இந்த Weeping Willow மரங்கள்:

சென்ற வருட புவிதினத்தின் போது நான் ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம் இது:

உலகின் நிலையான சொத்து எதுவென உணருவோம்!
***


இப்பதிவுக்காக அளித்த விருதுக்கு நன்றி வல்லமை!

tamilamudam நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக