பக்கங்கள்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..!


சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..!

-
இந்தியத் தாய்நாட்டின் செல்லமகள், இந்நாட்டின் இளவரசி,
நாலு கயவர்களிடம் சிக்கிக் கொண்டாள். வேளைகெட்ட வேளை
அது.
-
தனியாக இப்படிப் பறப்பட்டு வந்ததுக்கு அசட்டுத் துணிச்சல்
அல்ல காரணம்; அந்தப் போக்காளியான காந்திக் கிழவன் சொன்ன
ஒரு வார்த்தைதான்:
-
“உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை தங்க நகைகள் பூட்டிக்
கொண்டு எந்தவித சேதாரமும் இல்லாமல் ஒரு பெண்மணி தன்னந
தனியாக வெளியே போய்த் திரும்ப வந்துவிட்டாள் என்றால் நாம்
சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பொருள்.’ ஆண்டுகள்
அறுபதுக்கும் மேலாகி விட்டபடியினால் இனிமேல் பயமில்லை
என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறி பரீட்சை பார்க்க
நினைத்தாள் நம் இளவரசி.
-
இதுக்கும் அவள் உடம்பில் குன்னிமுத்து அளவு தங்க நகை போட்டுக்
கொண்டிருக்கவில்லை.
-
ஊர் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளை. போக்கிரிகள்
விழித்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் அவள் கால் வைத்ததுதான்
தாமதம்; செந்தூக்காய்த் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.
-
“டேய்… நான் யார் தெரியுமா’ என்று சொல்ல வாய் திறந்ததும்,
குதிரைக்குக் கடிவாளம் போடுவதுபோல் பேசமுடியாமல் துணியால்
வாயைக் கட்டிவிட்டார்கள்.
-
ஆக, பேச முடியலை; கூப்பாடும் போட முடியலை.
-
பூனை வாய்க் கிளி ஆனாள்.
-
பழம் உரித்துத் தின்று தொலியை வீசியதைப்போல் சாலையில்
வீசிவிட்டுப் போய் விட்டார்கள் அவளை. மயக்கம் தெளிந்து எழுந்து
விழுந்து தள்ளாடி நடந்தாள். ஊர் இன்னும் விழிக்கவில்லை.
-
பக்கத்தில் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது; அதைப் பார்த்து நடந்தாள்.
அது காவல்நிலையம்; விழித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
ஊர் தூங்கினாலும் அது தூங்காது. கதவு எப்போதும் திறந்தேயிருக்கும்;
அடையா நெடுங் கதவுகள் கொண்டது.
-
அந்த நேரங்கெட்ட நேரத்திலும் அங்கே ஒரு காவலன் துப்பாக்கி பிடித்து
நின்று கொண்டிருந்தான். இரவு பாரா.
-
புகார் சொன்னாள்.
-
எழுத்தர் வந்துவிடுவார்; அப்படி அந்த பெஞ்சில் உட்கார்.
-
அவனை கடந்து உள்ளே போய் பெஞ்சில் உட்கார்ந்தாள். கடந்து செல்லும்
போது, வாலிப வயசைக் கிளரும் ஒரு வியர்வை நெடி தெரிந்தது
அவனுக்கு. “துணைக்கு யாரும் வந்திருக்கிறார்களா?’ “இல்லை’
என்று தலை அசைத்தாள்.
-
அவள் உடம்பை அவன் பார்க்கும்விதம் சரியாகப்படவில்லை அவளுக்கு.
சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாதே என்று பட்டது.
-
குடிக்க தாகமாக இருந்தது. சுற்றிலும் பார்த்தாள். அவன் அவளையே
பார்த்தான். ஆடை கிழிந்த அலங்கோலமாகத் தெரிந்தாள்.
துப்பாக்கியை மூலையில் சாய்த்து விட்டு, கதவை மூடப்போனான்.
-
தப்பித்தோம் என்று ஜன்னல்வழியாக பாய்ந்து குதித்து ஓட்டம் பிடித்தாள்.
-
அது வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய கட்டிடம்: சன்னல்களுக்குக்
கம்பிகள் கிடையாது.
மறுகற்பழிப்பிலிருந்து தப்ப முடிந்தது நாட்டின் இளவரசியால்.
-
———————————————
- கி. ராஜநாராயணன்
நன்றி: குமுதம்


rammalar.wordpress thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக