பக்கங்கள்

வியாழன், 17 மே, 2012

நக்கீரன்"- பொய் வ‌ழ‌க்கு .நிரபராதியின் 13 வருட சிறை. அனுபவம்! பேட்டி.



"கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்."

என் மீது பொய் வழக்குகள் போட்ட உயரதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள். அவர்களை சபிக்க நான் விரும்பவில்லை. இன்று நாங்கள் விடுதலையாகி விட்டோம். இதனை அவர்கள் அறிந்திருப்பார்கள். மன சாட்சி இருந்தால் அவர்கள் கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்.

13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!
நக்கீரன் வாரமிருமை இதழுக்கு அளித்த பேட்டி

சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார் குணங்குடி அனீஃபா.

பா.ம.க.வின் பொருளாளர், பழனி பாபா உருவாக்கிய அகில இந்திய ஜிகாத் கமிட்டியின் தலைவர், த.மு.மு.க.வின் தலைவர் என்கிற பல்வேறு அடையாளங்கள் இவருக்கு உண்டு.

ரயில் குண்டு வழக்கில் ஜாமீனே கிடைக்காமல் 13 வருடங்கள் சிறையில் இருந்த அனீஃபாவை கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது பொடா நீதிமன்றம். இவரது விடுதலைக்காக தொடர்ந்து போராடிய முஸ்லிம் இயக்கங்களும் முஸ்லிம் சமூகமும் இந்த விடுதலையை கொண்டாடுகின்றன.

இந்தச் சூழலில், பேத்தியுடன் கொஞ்சிக்கொண்டிருந்த அனீஃபாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.

பதிமூன்று வருஷங்களுக்கு முன்பு நீங்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்னும் உங்கள் நினைவுகளில் இருக்கிறதா?

மறந்துவிடுகிற சம்பவமா அது? இன்று நினைத்தாலும் காவல்துறை மீது கோபம் கோபமாகத்தான் வருகிறது. ஆனா, மனசு பக்குவப்பட்டுவிட்டதால் அந்தக் கோபம் அமைதியாகிவிடுகிறது.

தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடி கிராமம்தான் என் சொந்த ஊர். இங்குள்ள என் வீட்டில் எனது ஒரே மகளின் திருமணம் 15.2.98 அன்று வெகு விமரிசையாக நடந்தது.

அப்போது நுழைந்த தேவகோட்டைபோலீஸார், "கோவை வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துப் போய் கோவை வெடிகுண்டு சம்பவத்தில் சதி ஆலோசனையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து என்னை கைது செய்தனர்.

இந்த வழக்கிற்காக திருச்சி மற்றும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்துகொண்டு சதி ஆலோசனையில் ஈடுபட்டபோது நான் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், எனது மகளின் திருமணத்தில்தான் கைது செய்யப்பட்டேன் என்கிற வீடியோ ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பித்தோம்.

இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த நீதிபதி என்மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்று கூறி என்னை விடுதலை செய்தார்.

அதேசமயம், இந்த வழக்கில் என்னைக் குற்றவாளியாக கோர்ட்டில் நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த போலீஸார், இந்த வழக்கிற்காக சிறையில் நான் இருந்தபோதே திருச்சி, ஈரோடு, ஆலப்புழை ஆகிய 3 இடங்களில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தை என்னோடு இணைத்து அதில் கைது செய்தனர். அந்த வழக்குதான் 13 வருடங்களாக நீடித்து... இப்போது விடுதலையாகியிருக்கிறேன்.

13 வருடங்களாகவே ஜாமீனே கொடுக்கப்படாத இந்த வழக்கில், நீங்கள் குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபித்தீர்கள்?

இந்த வழக்கில் எனக்கு எதிராக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் முகமது அலி, தாஸ் என்கிற 2 பேரை ஐ விட்னஸாக முன்னிறுத் தியது போலீஸ். 8 பேரை வைத்துக்கொண்டு நான் சதி ஆலோசனை நடத்தியதாகவும் அதனை இந்த 2 பேரும் கவனித்த தாகவும் போலீஸ் தரப்பில் புனையப்பட்டிருந்தது.

ஆனால், இறுதிகட்ட விசாரணையில் போலீஸின் இந்த 2 சாட்சிகளும் "அனீஃபாவை நாங்கள் பார்த்ததே இல்லை. போலீஸ் நீட்டிய கடிதத்தில் கையெழுத்திட்டோம். அவ்வளவுதான்' என்று பகிரங்கமாகவே உண்மையை ஒப்புக்கொண்டனர். போலீஸாரின் பொய் வழக்கிற்கு என் மீதான வழக்கின் தீர்ப்பு ஒரு நெத்தியடி.

இந்த வழக்கு தொடர்பாக சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தீர்களே?

உண்மைதான். பொடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தபோது, வழக்கை விரைந்து முடிக்க போலீஸ் நினைக்கவே இல்லை. வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கான தேதி குறிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகும் நிலையில் நீதிபதி மாற்றப்பட்டுவிடுவார்.

இதுவரை 8 நீதிபதிகள் இப்படி மாறிவிட்டனர். பொடா கோர்ட்டின் தற்போதைய நீதிபதி பிரேம்குமார், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு தேதியை குறித்தார். ஆனால், இதனை விரும்பாத காவல்துறையினர், நீதிபதியை மாற்ற முயற்சித்தனர்.

இதனைக் கண்டித்து சிறையினுள்ளே உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினோம். அனைத்து சிறைவாசிகளும் எங்களுக்கு ஆதரவாக நின்றனர்.

அதே சமயம், இந்த மாதம் 5-ந் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி... பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் த.மு. மு.க.வினர் கோர்ட்டை முற்றுகையிடும் போராட்டத்தை பெரிய அளவில் நடத்தினர்.

இதன் விளைவாக, சிறைத்துறை அதிகாரிகள், "நீதிபதியை மாற்றமாட்டோம்னு நீதித்துறை உத்திரவாதம் தந்திருக்கிறது. போராட்டத்தை கைவிடுங்கள்' என்றனர்.

அதனை ஏற்று உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டோம். இந்த மாதம் 21-ந் தேதி "இந்த வழக்கில் ஒரு குற்றச்சாட்டைக் கூட போலீஸ் தரப்பு நிரூபிக்கவில்லை. எந்த ஆதாரத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை' என்று கூறி நீதிபதி விடுதலை செய்தார்.

இந்த 13 வருட சிறைவாசத்தில் ஏற்பட்ட அனுபவங்கள்?

மிக திடகாத்திரமான உடலுடன், மனத் தைரியத்துடன் சிறைக்குச் சென்றேன். ஆனால், இன்றைக்கு ஊன்றுகோல் உதவியில்லாமல் நடக்க முடியாது என்கிற நிலையில் வெளியே வந்திருக்கிறேன்.

காரணம் 13 வருடங்களாக எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்தான். எனக்கு எந்த நோயும் இருந்ததில்லை. ஆனால், இப்போது ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், முதுகுத்தண்டு தேய்மானம், கண் பார்வை கோளாறு என அனைத்தும் இருக்கிறது.

மன உளைச்சல்கள் தந்த பரிசு இது. எந்தத் தவறுமே செய்யாமல் தண்டிக்கப்படுகிறோமே என்கிற மன உளைச்சல்கள்தான்.

என்னை சிறையில் சந்திக்க என் மனைவி ஹமீதாபீவி வருவார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் "கணவன் உயிரோடு இருந்தும் விதவையாக இருக்கிறாளே' என்று நெக்குருகிப் போவேன். இந்தக் கவலையும் என்னை மன நோயாளியாக்கியது. இஸ்லாத்தில் தற்கொலைக்கு இடம் கிடையாது. அதனால், தற்கொலை எண்ணத்தில் இருந்து இறைவனால் தடுக்கப்பட்டேன்.

சிறைகளில் உங்களின் நாட்கள் எப்படிக் கழிந்தது?

இந்த 13 வருடங்களில் 5 வருடங்கள் மதுரை மத்திய சிறையிலும், 5 வருடங்கள் சென்னை பழைய மத்திய சிறையிலும், கடைசி 3 வருடங்கள் புழல் மத்திய சிறையிலும் இருந்தேன். மதுரை சிறைச் சாலையை கொடுஞ்சாலை என்றுதான் வர்ணிக்க வேண்டும். அந்தளவுக்கு இருந்தது அந்த சிறைச்சாலை.

காலைக்கடன் கழிக்க வும் குளிக்கவும் ஒரு அரைமணி நேரம் தருவார்கள். அதன் பிறகு சாப்பிடுவதற்கு 15 நிமிடம்... அவ்வளவுதான்! பிறகு ஒரு சிறிய அறையில் போட்டு பூட்டி விடுவார்கள். மதியம் சாப்பாடு வாங்க அரை மணி நேரம். அதேபோல சாயந்தரம். இதைத்தாண்டி வெளிக் காற்றே சுவாசிக்க முடியாது. எவரிடமும் பேசக்கூடாது. பேசினால்... ஒருமையில் திட்டுவார்கள். சாப்பிடுகிற நேரத்தைத் தவிர, தாகத்திற்கு ஒருவாய் தண்ணீர் கேட்டால்கூட அவ்வளவு எளிதாக கிடைக்காது. இதே நிலைதான் சென்னை மத்திய சிறையிலும் இருந்தது.

சிறைவாசிகள் என்பவர்கள் "அடிமைகள்' என்பதுதான் அதிகாரிகளின் பார்வை. புழல் சிறையில் இங்கு கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. அதாவது, சிறைவாசிகளுக்கு மின்விசிறி ஏற்பாடு செய்திருந்தார் முதல்வர் கலைஞர். மன உளைச்சலில் இருந்த என்னைப் போன்றவர்களுக்கு மனப் புழுக்கத்தை போக்கியது இந்த மின்விசிறிகள்.

நான் இருக்கும் பகுதிக்கு பாதுகாப்பு தொகுதி-1 என்று பெயர். இதனைச் சுற்றி சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் காலி இடம் இருக்கு. இதனை பசுமையாக வைத்துக் கொள்ள விரும்பி சிறைத்துறையிடம் அனுமதி கேட்டபோது ஒப்புக் கொண்டனர்.

இந்த நிலத்தில் 10 பலா கன்றுகள், 10 மாங் கன்றுகள், 25-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள், 25 வேப்பங் கன்றுகள் மற்றும் செடி-கொடிகளை நட்டு வைத்திருக்கிறேன்.

பகல் நேரங்களில், எங்கள் தொகுதியில் அடைக்கப்பட்டிருந்த 15 சிறைவாசிகளுக்கும் பசுமை நிலப்பரப்பில் உலாவ அனுமதி கிடைக்கும். அப்போதெல்லாம், நான் நட்டு வைத்த கன்றுகளுடனும், செடி-கொடிகளுடனும் பேசிக் கொண்டிருப்பேன். மன உளைச்சலில் தவித்து நோயாளியாகி விட்ட எனக்கு, இதுதான் மருந்தாக இருந்தது.

அதே நேரத்தில் 400 சிறைவாசிகளுக்கு 1 டாக்டர் இருக்க வேண்டுமென்கிறது விதி. ஆனால், 2000 சிறைவாசிகளுக்கும் 2 டாக்டர்கள்தான் இருக்கின்றனர்.

இதனால் நோய்களில் அவதிப்படுவது அதிகரிக்கிறது. ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வந்தால் உடனடியாக வெளி மருத்துவமனைக்கு சிறைவாசிகளை அழைத்துப் போக வேண்டும். இதற்கான உடனடி வசதிகள் சிறையில் இல்லை. காவல்துறைக்கு தகவல் கொடுத்து, அவர்கள் ஆக்ஷன் எடுப்பதற்குள் சிறையிலேயே நோயாளி இறந்து விடுகிறார்.

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்று நிறைய பிரச்சினைகளை அனுபவப்பூர்வமாக பார்த்திருக்கிறேன். சிறை வாழ்க்கையை பற்றி உணர்வுப்பூர்வமாக அனுபவித்த கலைஞர்தான், சிறைத்துறையை சீர்படுத்த முடியும். அவரை விட்டால் வேறு யாரும் இதனை செய்ய மாட்டார்கள்.

சிறையிலிருந்து விடுதலை பெற்று விட்டீர்கள். த.மு.மு.க.வின் அரசியல் கட்சியான ம.ம.க.வின் தலைவராக நியமிக்கப்படுவீர்கள் என்கிற பேச்சு எதிரொலிக்கிறதே?

நான் சிறைக்கு செல்லும்போது, கொள்கைகளுக்கு மக்களிடம் மரியாதை இருந்தது. ஆனால், இன்றைக்கு கொள்கைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு வேறு சில அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிற அளவுக்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது.

இந்த சூழலில் தீவிர அரசியலில் ஈடுபட மனது விரும்பவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னால் துவக்கப்பட்ட த.மு.மு.க., இன்று பொது பிரச்சினைகளில் மனித நேயத்துடன் மிகவும் வலிமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பேராசிரியர் ஜவாஹிருல்லா பொது வாழ்வில் நேர்மையானவராகவும், தூய்மை யானவராகவும் இருக்கிறார். அதனால், அவரது தலைமையை ஏற்று, த.மு.மு.க. மூலம் சமூக பணி செய்யவே விரும்புகிறேன்.

அதேசமயம், த.மு.மு.க. தலைமை என்ன வேலைத்திட்டம் கொடுத்தாலும் அதை செய்ய வேண்டியது என் கடமை. அது அரசியலாக இருந்தாலும் கூட.

உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய காவல்துறை உயரதிகாரிகள் குறித்து?

என் மீது பொய் வழக்குகள் போட்ட உயரதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள்.

அவர்களை சபிக்க நான் விரும்பவில்லை. இன்று நாங்கள் விடுதலையாகி விட்டோம். இதனை அவர்கள் அறிந்திருப்பார்கள். மன சாட்சி இருந்தால் அவர்கள் கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்.

-சந்திப்பு: இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்
நன்றி: "நக்கீரன்"

ilayangudikural. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக